Friday 3rd of May 2024 09:54:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தமை உறுதியானது!

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தமை உறுதியானது!


நீலகிரியில் இந்திய விமானப்படை ஹெலிகப்டர் இன்று விழுந்து நொருங்கிய விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துவிட்டதாக இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், பிபின் ராவத் உட்பட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

இன்று தமிழகம் - குன்னூரில் விபத்திற்குள்ளான Mi-17v5 ஹெலிகாப்டரில் இவர் தன் குடும்பத்தோடு பயணித்தார்.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் இராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.

டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். இராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் இராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள இராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. முகாமைத்துவம் மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று கொங்கோ குடியரசில் பணியாற்றினார்.

31 டிசம்பர், 2016 அன்று இராணுவ தலைமைத் தளபதியாகப் பிபின் ராவத் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து இராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற முதல் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017-ஆம் ஆண்டிலிருந்து நேபாள இராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.

அவருடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

1978-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியன்று அவருடைய தந்தை பணியாற்றிய படையிலேயே இரண்டாவது லெப்டினென்ட்டாகப் பதவியேற்றவர், லெப்டினென்ட் (1980), கப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் கேணல் (1998), கேணல் (2003), பிரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), என்று பல்வேறு படிநிலைகளில் உயர்ந்து, 2019-ம் ஆண்டு முப்படைகளுக்குமான தளபதியாகப் பதிவி ஏற்றார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE